Skip to main content
Languages

பால பருவம்

பகவான் ரமணர் பிறந்த ஊர் திருச்சுழி. மதுரை ஜில்லாவில் ஓர் கிராமம். அவரது தந்தை ஸ்ரீ சுந்தரம் ஐயர் கண்ணியமான வக்கீல் தொழில் நடத்தி வந்தார். அவருக்கு மூன்று புதல்வர்கள். இரண்டாவது குழந்தையாகிய ரமணருக்கு வேங்கடராமன் என்று நாமகரணம் செய்தனர். அக்ஷராப்யாசமானதும் குழந்தை வேங்கடராமனை உள்ளூர்ப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தார்கள். பின்னர், திண்டுக்கல்லில் ஒரு வருடம் தங்கியிருந்து ஐந்தாவது வகுப்பில் படித்தார்.  அதற்குப் பின் மதுரைக்குப் போய் ஸ்கார்ட்ஸ் மிடில் ஸ்கூலிலும், மிஷன் ஹைஸ்கூலிலும் கற்றார்.

Thiruchuli House — Birth Place of Sri Ramana

Thiruchuli House — Birth Place of Sri Ramana

ஒருநாள் உறவினர் ஒருவர் வந்திருந்தார். “எங்கிருந்து வருகிறீர்?” என்று வேங்கடராமன் குசலம் விசாரித்தார். ‘அருணாசலத்திலிருந்து வருகிறேன்’ என்று பதில் வந்தது. அது வேங்கடராமனைப் பரவசப்படுத்தியது. சிறு வயது முதல் உள்ளத்தில் தானே ஒலித்துக் கொண்டிருந்த ‘அருணாசலம்’ என்னும் ஏதோ ஒன்று, பூமியிலேயுள்ள ஒர் தலம்,  மலை என்னும் உரையைக் கேட்டு அவர் ஆச்சரியமுற்றார்.


அதன் பிறகு ஒருநாள் ‘பெரியபுராணம்’ பிரதி ஒன்று கிடைத்தது. அதிலடங்கிய நாயன்மார்களுடைய திவ்விய சரித்திரங்கள் அவரது உள்ளத்தைக் கவர்ந்தன. 1896 ஆம் ஆண்டில் திடீரென ஒரு மாறுதல் ஏற்பட்டது.

ஒருநாள் வேங்கடராமன் தனது வீட்டு மாடியில் உட்கார்ந்து கொண்டிருந்தார். உடலிலே நோய் ஒன்றும் இல்லை. ஆனால் திடீரென்று தான் மரணத் தறுவாயில் இருப்பதாகத் தோன்றியது. தானே இதை எதிர் கொள்ளத் துணிந்தார்.

பிற்காலத்தில் இதை விவரிக்கும்போது ஸ்ரீமஹர்ஷிகள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:


‘திடீரென்று ஏற்பட்ட இச்சம்பவம் என்னைத் தீவிர யோசனையில் ஆழ்த்தியது. ‘சரி சாவு நெருங்கிவிட்டது. சாவு என்றால் என்ன? எது சாகிறது? இந்த உடல்தானே செத்துப் போகிறது?’ என்று எனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டு உடனே மரணானுபவத்தை ஏகாக்கிரமாய் பாவித்துப் பார்த்தேன்.

‘பிணம்போல விறைக்குமாறு கை கால்களை நீட்டிப் படுத்தேன். ‘சரி, இந்த உடம்பு செத்துவிட்டது’ என்று உள்ளுக்குள்ளேயே சொல்லிக் கொண்டேன். இதை மயானத்திற்குக் கொண்டுபோய் எரித்து விடுவார்கள். இது சாம்பலாய்ப் போகும். ஆனால் இந்த உடம்பின் முடிவுடன் ‘நானும்’ இறந்து விட்டேனா? இந்த உடல் சப்தமற்று, சலனமற்றுக் கிடக்கிறது. ஆனால் இந்த உடலுக்கும் அப்பாற்கூட ‘நான்’ என்ற சொரூபத்தின் சக்தியும், தொனியும் ஒலிக்கிறதே! ஆகவே, ‘நான்’ தான் ஆத்மா. உடலுக்குள் கட்டுப்படாத ஒரு வஸ்து என்ற முடிவுக்கு வந்தேன். இதெல்லாம் வெறும் மனத்தோற்ற மல்ல. நிதர்சனமான உண்மை அனுபவமென்று தெளிவாய் விளங்கியது.’

மரண பயம் பறந்து போய் விட்டது. படிப்பை சிறிதும் நாடவில்லை; வீட்டில் உள்ளவர்களை நினைக்கவில்லை. விளையாட்டும், சண்டையும் மறைந்தன. எதிலும் பற்றில்லை. சாந்தமும், வணக்கமும், நிறைந்தவரானார். உணவைப் பற்றிச் சிறிதும் கவலையில்லை. நல்லதோ, கெட்டதோ, கிடைத்ததை ருசி, மணம் ஒன்றையும் கவனியாமல் சாப்பிடலானார். படிப்பிலும் கவனம் செலுத்துவதில்லை என்று தெந்ததும் உறவினர் வெறுப்பும் கோபமும் கொண்டனர். ஆகஸ்ட் 29ம் தேதியன்று விஷயம் முற்றிவிட்டது.

அன்று வேங்கடராமன் நோட்டுப் புத்தகத்தை வைத்துக் கொண்டு ஒரு பாடம் எழுதிக் கொண்டிருந்தார். ஆங்கில இலக்கணப் புத்தகத்தில் உள்ள ஒரு அத்தியாயத்தை மூன்று முறை எழுதிக் கொண்டு வர வேண்டுமென்பது ஆசியன் கட்டளை. திடீரென்று வெறுப்பு உணர்ச்சி தோன்றி விட்டது. புத்தகங்களைக் கட்டி மூலையில் போட்டுவிட்டு கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தார்.

இதை கவனித்துக் கொண்டிருந்த அண்ணா நாகசாமி, தம்பியைப் பார்த்து, ‘இப்படிப்பட்டவனுக்கு இதெல்லாம் என்னத்துக்கு’ என்று வெறுப்புடன் இரைந்து கேட்டார். சில நாட்களாகவே இம்மாதியான கேள்விகள் வேங்கடராமனுக்கு சகஜமாகி விட்டன. அன்று மட்டும் அக்கேள்வி சுருக்கென்று தைத்தது.


“ஆமாம், வாஸ்தவம்தானே! எனக்கு இங்கு என்ன வேலை?” என்ற சிந்தனை எழுந்தது.


அதே சமயத்தில், சில மாதங்களுக்கு முன்பே கேள்விப்பட்ட அருணாசல திவ்ய கே்ஷத்திரத்தின் நினைவு வந்தது. உடனே இருந்த இடத்தை விட்டு எழுந்து  “பள்ளிக்கூடத்தில் இன்று ஸ்பெஷல் கிளாஸ்; போய்விட்டு வருகிறேன்” என்று அண்ணனிடம் சொன்னார்.

‘அப்படியானால், கீழே போய், பெட்டியைத் திறந்து, ஐந்து ரூபாய் எடுத்துக் கொண்டுபோய் என் காலேஜ் சம்பளத்தையும் கட்டிவிட்டு வரு, என்று கூறினார் நாகசாமி.


உடனே ஒரு கடிதம் எழுதி, ரூபாய் இரண்டையும் அத்துடன் சேர்த்து, நன்றாகத் தெயும்படியான ஒர் இடத்தில் வைத்துவிட்டு ரயில் நிலையத்திற்குப் புறப்பட்டார்.


கடிதத்திலே கண்டிருந்ததாவது:


“நான் என் தகப்பனாரைத் தேடிக் கொண்டு அவருடைய உத்தரவின்படி இவ்விடத்தை விட்டுக் கிளம்பிவிட்டேன். இது நல்ல காயத்தில்தான் பிரவேசித்திருக்கிறது. ஆகையால் இந்தக் காயத்திற்கு ஒருவரும் விசனப்பட வேண்டாம். இதைப் பார்ப்பதற்காகப் பணமும் செலவு செய்ய வேண்டாம். உன் சம்பளத்தை இன்னும் செலுத்தவில்லை. ரூ.2 இதோடுகூட இருக்கிறது.


இப்படிக்கு


ரயில் நிலையத்தை அடைந்தபோது நேரமாகிவிட்டது. ஆனால், அதிருஷ்டவசமாக அன்று ரயிலும் தாமதமாகவே வந்து சேர்ந்தது. திருவண்ணாமலைக்குப் பயணத்தைத் தொடர்ந்து நான்காம்நாள் தமது இலக்கை அடைந்தார்.